search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பூர் அருகே லாரி மீது வேன் மோதல்"

    வேப்பூர் அருகே லாரி மீது பெரம்பலூர் வேன் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
    வேப்பூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குறும்பலூர்பாளையத்தை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 40). இவர் பெரம்பலூரில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வேனில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவர் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் 14 பேரை தனது வேனில் ஏற்றிக்கொண்டார்.

    நள்ளிரவு 1 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து வந்த லாரி ஒன்று திடீரென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சென்னை ஆழ்வார்நகரை சேர்ந்த பிரிட்டோ மனைவி தேன்மொழி(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேன் டிரைவர் நல்லுசாமி, பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஜாமுதீன், விஜயா, முகமது இனியா, லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமாரி, சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த சாரதா, ஆகாஷ், வேப்பந்தட்டையை சேர்ந்த அனிதா, சென்னை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ஜெனிதா உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நல்லுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான தேன்மொழியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×